2020 சனிப்பெயர்ச்சி முழுப்பலன்..! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு துரதிர்ஷ்டம் ? உங்க ராசிக்கு என்னன்னு பாருங்க !!

சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது.

இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு கிடைக்கும் என்ன பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்வது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் அதிபதி பத்தில் அமர்வது பாதகமில்லை. சசமகா யோகம் கிடைக்கிறது. தொழில் ஸ்தான அதிபதி அவரது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்களுக்கு பாதகமில்லை.

தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுக்கு லாபமோ லாபம்தான்.

செய்யும் தொழிலில் வருமானம் கூடும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் உங்கள் தோள் மீது சுமத்தப்படும். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் பாரம் கண்ணுக்குத் தெரியாது.

கணபதியை வணங்க, வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும். உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் நல்லதாகவே நடக்கும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும்.

தொழில் விசயமாக அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும்.

திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பும் நல்ல வேலை உத்தியோகமும் அமைய வாய்ப்பு ஏற்படும்.

பாதிப்புகள் குறைந்து பலன்கள் அதிகரிக்க காக்கைக்கு எள் சாதம் வைக்கவும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் தங்கத்தினால் ஆன சொர்ண சனீஸ்வரரை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களே, இந்த சனிப்பெயர்ச்சியால் இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள்.

எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப்புழக்கம் சற்று தாராளமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர்.

புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். பெண்களுக்கு இதுநாள் வரை இருந்த உடல் நலப்பிரச்சினைகளும், மன அழுத்தங்களும் தீரும். வேலை தேடுபவர்களுக்கும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும்.

இதுநாள்வரை தடைபட்டு வந்த திருமணம் கை கூடி வரும். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் மடியில் தவழும் காலம் வரப்போகிறது. வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள்.

வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களும் வாங்குவீர்கள். ஒன்பதாம் இடத்தில் சனி அமர்ந்து உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், முயற்சி தைரிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களை சனி பகவான் பார்வையிடுகிறார். இதனால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். தைரியம் அதிகரிக்கும்.

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுநாள்வரை பட்ட துயரங்கள் தீரப்போகிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் குடும்பத்துடன் சனிபகவானையும், தர்ப்பாரண்யேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் தீரும் இனி வரும் காலமெல்லாம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வசந்த காலமே.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களே சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் என்று கவலைப்பட வேண்டாம். பணவரவு அதிகமாக இருக்கும் காரணம் சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார்.

இதுவரை வராமல் தடையாக இருந்த பென்ஷன், பி.எப் போன்ற விஷயங்கள் தடையின்றி வந்து சேரும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உங்களது ராசிக்கு 10ஆம் இடத்தை சனிபகவான் பார்க்கிறார்.

தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். பங்கு சந்தை முதலீடுகளில் அதிக கவனம் தேவை. அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை.

எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். உயரதிகாரிகளால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் முதலில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் பிடித்த வேலையை தேடுதல் வேண்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது.

உங்கள் ராசிக்கு எட்டு, ஒன்பதாம் அதிபதியான சனி பகவான் அவரது வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

சனிபகவான் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார் நன்மையே செய்வார். எட்டாம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார்.

தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும்.

வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எட்டில் செவ்வாயோ சனியோ இருந்தால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது சகஜம்தான்.

போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அதிக வேகம் ஆபத்துதான் நிதானமாக செல்வது நல்லது. பெண்களே அஷ்டமத்து சனி காலத்தில் எதையும் பொறுமையாக கையாளுங்கள். அடுப்பங்கரையில் கவனமாக இருங்கள். நெருப்பு காயங்கள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

கடகம்
சனிபகவான் உங்களது ராசிக்கு 7 மற்றும் 8ம் வீட்டிற்கு அதிபதி அவர் 7ம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது சற்று சுமார் ஆனாலும் கடகம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது.

சனி பகவான் ஆறாம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் கொஞ்சமாக இருந்தது. இனி சஞ்சரிக்கவிருக்கும் 7ஆம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும்.

சனிபகவான் உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார்.

வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும்.

புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். சனிபகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும்.

செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.

தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். இந்த இடப்பெயர்ச்சியால் உங்கள் பெற்றோர்களுக்கும் பாதிப்பு வரலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும், கடன் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும்.

பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும்.

அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும்.

தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும். வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது.

கடன்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெற லட்சுமி நரசிம்மரை வணங்கலாம். மங்கள சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார். சனிதிசை, கண்டச்சனியால் பாதிப்பு குறைய இங்குள்ள சனிபகவானை தரிசனம் செய்து அர்ச்சனை செய்ய நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்
இனி தொட்டதெல்லாம் ஜெயமே. இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும்.

வேலை விசயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.

விசா, பாஸ்போர்ட் எளிதாக வந்து சேரும். புதிய தொழில் தொடங்குவதிலும் முதலீடு செய்வதிலும் கவனமாக இருக்கவும். பங்குச்சந்தை முதலீடுகளும் இப்போதைக்கு தேவையில்லை.

இதுநாள்வரை வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும்.

முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். உடன்பிறந்த சகோதரிகளால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

இதுநாள் வரை இழுத்தடித்த வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள். காதல் கணிந்து திருமணத்தில் முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும்.

உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். எட்டாம் வீட்டை சனி பார்வையிடுவதால் போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை.

எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடியுங்கள். சனிபகவான் 7வது பார்வை விரைய தானத்தைப் பார்ப்பதால் தேவையற்ற பண விரையம், பொருள் நஷ்டம் ஏற்படும். எதிர்பாராத பணம் வந்தாலும் அதனை கவனத்தோடு செலவு செய்யவும். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கவும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு அதிக நன்மைகள் நடக்கப்போகிறது. தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும், திருமணம் கைகூடி வரும், காதல் மணியடிக்கும். காதலர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும். வீட்டில் எப்போது உற்சாகமாக இருப்பீர்கள்.

அர்த்தாஷ்டம சனியால் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். இன்னும் சில மாதங்கள்தான் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது.

சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவார்.

பெண்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைபேறு கிடைக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. சனிபகவானை வணங்கி வருவதால் பாதிப்புகள் குறையும்.

துலாம்
நான்காம் வீடு என்பது சுக ஸ்தானம், இந்த இடத்தில் அமரும் சனிபகவான் உங்கள் ராசியை பத்தாம் பார்வையாக பார்க்கிறார். மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார், ஏழாம் பார்வையால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.

4ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.

வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு செல்லவேண்டியிருக்கும். பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பின்னர் கிடைக்கும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்பட்டாலும் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார்.

மூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும்.

நான்காம் இடம் தாய் ஸ்தானம் இந்த இடத்தில் சனி அமர்வதால் அம்மாவின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும். எனவே அம்மாவை அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி உடல்நலத்தை கவனிக்கவும்.

ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் சரியான நேரத்திற்கு, சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும்.

பங்குச்சந்தை முதலீடுகள் முதலில் லாபம் கொடுத்தாலும் முதலீடுகளில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் உற்சாகமாக இருங்கள், வேலைகளை ஒத்திப்போடாமல் உடனே செய்து முடியுங்கள். கணவன் மனைவி உறவு உற்சாகமாக அமையும். மகிழ்ச்சி நீடிக்கும்.

பேச்சில் இனிமை கூடும். காதல் திருமணத்தில் முடியும், சிலருக்கு தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிறைய ஓய்வு எடுங்கள்.

அர்த்தாஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள். காலபைரவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள்.

விருச்சிகம்
ஏழரை சனியால் இத்தனைய ஆண்டுகாலமாக சோதனைகள் மூலம் பல பாடங்களை கற்றுக்கொண்டிருப்பீர்கள். ஏழரை சனி முடிந்து விட்டது இனி வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள். நல்ல செய்திகள் உங்களை தேடி வரப்போகிறது.

இனி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கொண்டாட்டங்கள் அதிகரிக்கும். உங்கள் உழைப்புக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் சேரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள்.

வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு வேலையில் திருப்தியான நிலை மற்றும் விருப்பமான வேலை, எதிர்பார்த்த வருமானத்துடன் கூடிய வேலை வந்து சேரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. வெளியூர், அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு பணவரவு அதிகரிக்கப்போகிறது.

எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி மூலம் திடீர் வருமானம் கிடைக்கும். காதல் இனிக்கும் சிலருக்கு கல்யாணத்தில் முடியும். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும்.

பிள்ளைபாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் சுப காரியங்கள் நடைபெறும்.

அதற்காக சம்பாதிக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக செய்வீர்கள். சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் சேமித்து வையுங்கள். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம் பிறக்கும். வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வரும் பணத்தை முறையாக சேமித்தாலே கடனின்றி வாழலாம்.

யாருக்கும் பணம் கடன் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும். இல்லாவிட்டால் கொடுத்த பணம் திரும்ப வராது. யாருக்கும் கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துங்கள்.

நேரத்திற்கு சாப்பிடுங்கள். நீரிழிவு, ரத்தகொதிப்பு இருப்பவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். குடும்பத்தில் புதுவரவு உண்டு. உற்சாகத்தோடு செயல்படுங்கள் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனி என்பதால் பட்ட காலிலே படும் என்பதால் அதிக கவனம் தேவை. தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் ஜாக்கிரதையாக பேசவும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். பேச்சில் கவனம் தேவை.

குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து பேசவும். பாத சனி நடக்கும்போது கவனம் தேவை. பாத சனி நடக்கும்போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது.

சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது. எனவே நடப்பது,ஓடுவது,வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை. சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் வரும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.

கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும்.

இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

வேலை காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்று போரட வேண்டி வரும். சனிபகவான் 3ஆம் பார்வையாக உங்கள் ராசியின் 4ஆம் இடத்தை பார்ப்பதால் உயர் கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும். இதுவரை மனதில் இருந்து வந்த இனம் தெரியாத பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கி அதிலிருந்து விடுபட வாய்ப்புகள் அமையும்.

தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வு இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சனிபகவானை தரிசனம் செய்து வாருங்கள் சந்தோஷம் அதிகரிக்கும்.

மகரம்
ஜென்ம சனி என்றாலே பாதிப்பு வருமே என்று மகரம் ராசிக்காரர்கள் பயப்பட வேண்டாம். சனிபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து கொண்டு ராசிக்கு மூன்றாம் இடம், ஏழாம் இடம், பத்தாம் இடத்தைபார்வையிடுவதால் உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தடைபட்டு வந்த திருமண சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் ஊதிய உயர்வு கிடைக்கும்.

ஒரு சிலருக்கு அரசு வேலையும் கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் சக ஊழியர்களின் நட்பும் ஒத்துழைப்பும் கிட்டும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பம் கிட்டும். சிறு தொழில்கள் சிக்கலின்றி நடைபெறும்.

பணப்பிரச்சினை நெருக்கடியாகத்தான் இருக்கும் சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியம் கெடும். எனவே கவனமாக செயல்படுங்கள்.

உடலுக்கும்,மனதுக்கும்,உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தவிருங்கள். மன சஞ்சலங்கள், குழப்பங்கள் குறைந்து தைரியம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். மாணவர்கள் ஞாபகசக்தியை அதிகரிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நன்கு மதிப்பெண் பெற முடியும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருங்க நல்லதே நடக்கும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள். புத்திர பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்களுக்கு விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். பெண்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். கணவரிடரும், குடும்பத்தினரிடமும் உற்சாகமாக நேரத்தை செலவிடுங்கள். 30 மாதத்தில் ஜென்மசனியை சிக்கலின்றி கடந்து விடலாம். சனிபகவானை தரிசனை செய்யுங்கள் பாதிப்புகள் குறையும்.

கும்பம்
சனிபகவானும் உங்களுக்கு ராசி அதிபதி. 12வது இடம் அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது. சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. அவர் நல்லதே செய்வார்.

சனி பகவான் 12ல் அமர்வதால் பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். விரைய ஸ்தானத்தில் அமர்ந்து குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்க. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.

ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். வேலையில் ஊதிய உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள்.

பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். பணம் கொடுக்கல் வாங்கலால் உறவுகள்,நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் புதிதாக ஏற்படும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும். சனிபகவான் பால சனியாக இருக்கிறார். அவரை வணங்கினால் நன்மை நடைபெறும்.

மீனம்
உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி சஞ்சரிப்பதால் சனிக்கிழமை செய்யும் செயல்கள் வெற்றி கிடைக்கும். லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் நன்மை அதிகரிக்கும். இதுநாள் வரை மனதில் குழப்பமாக இருந்திருக்கும்.

இனி குழப்பம் நீங்கி நன்மையே நடக்கும். லாப ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவானால் உங்களுக்கு வருமானம் பெருகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும்.

லாப சனியால் தன லாபம்,வருமானம் அதிகரிக்கும்,தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால்,உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பதவி உயர்வு கிடைக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடியும். இது அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சி. சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். தான தர்மம் செய்யுங்கள்.